ழைக்கிடையே ரத்தச் சகதியாகி வருகிறது டெல்டா பகுதி. காரைக்கால் பா.ம.க. மாவட்டச் செயலாளர் தேவமணி படுகொலையைத் தொடர்ந்து, நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலை செய்யப்பட்டிருப்பது டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரத்தை பதற வைத்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துவருகிறார். இவரது மனைவி பழனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர். மகன் ஸ்டாலின்பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். தமிழார்வன் கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரபலமான அரசியல் பிரமுகராக இருந்துவந்தார். விவசாயிகள் பிரச்சினை, பொதுமக்கள் பிரச்சினை, உள்ளூர் பிரச்சனைகளை போராட்டத்தின் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது இவரது வழக்கம். இதனால் காவல்துறையினருக்கும் இவருக்குமிடையே அடிக்கடி முட்டல், மோதல் இருந்து வந்திருக்கிறது.

delta

இந்நிலையில், கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நீடாமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே அவரைப் பின்தொடர்ந்து மூன்று பைக்கில் வந்த எட்டு ரவுடிகள் அவரது காரை வழி மறித்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டத் தொடங்கியதும், தமிழார்வன் தப்பி ஓட... ரவுடிகள் விரட்டிச் சென்று படுகொலை செய்துவிட்டு, டூவீலரில் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த நடேச தமிழார்வன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisment

தகவலறிந்து வந்த தமிழார்வனின் உறவினர்களும் கட்சிக்காரர்களும், குற்றவாளி களை கைது செய்யக்கோரி நடேச தமிழார்வனின் சடலத் துடன் பெரியார் சிலையருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் எஸ்.பி. விஜயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம், நாகை எம்.பி. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த கொலையில் காவல்துறை ஆய்வாள ருக்கு தொடர்பிருக்கிறது, குற்றவாளிக்கு பாதுகாப்பு வழங்கியதே காவல்துறை ஆய்வாளர்தான் என்றும் குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் எனவும் திரண்டிருந்த தோழர்கள் முழக்கமிட்ட னர். எஸ்.பி. உறுதியளித் ததைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டனர்.

இதுகுறித்து நீடா மங்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம், “"பூவனூரைச் சேர்ந்த ராஜ்குமார், சாதிக் கட்சி ஒன்றில் இளைஞரணிப் பொறுப்பில் இருந்து வருகிறார். அவர்மீது மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் இருக் கின்றன. கஞ்சா கடத்தல், ஆள் கடத்தல், திருட்டு வழக்கில் தொடர் புடையவர்களை காப்பாற்றி பணம் பறிப்பது இந்த நபரின் வாடிக்கை.

சிலநாட்களுக்கு முன்பு பூவனூர் தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் மோகனுடனான ஒரு பிரச்சினையில் கொலை மிரட்டல்விட, அப்பகுதி மக்களே திரண்டு சென்று மாவட்ட எஸ்.பி., டி.ஐ.ஜி.யிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அந்த புகார் மீது, காவல்துறை ஆய்வாளர் முருகேசன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

delta

நீடாமங்கலம் பகுதியில் பஞ்சாயத்து உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ஈடுபட்டுவந்த தமிழார்வனுக்கும் ராஜ்குமாருக்கும் முட்டல்மோதல் ஏற்பட்டது. அந்த மோதலை பெரிதாக்கி கொலை வரை கொண்டு செல்ல வைத்ததே காவல்துறை யினர்தான். சில தினங்களுக்கு முன்பு ரிஷியூரைச் சேர்ந்த கலைமணி என்கிற இளைஞரை, ராஜ்குமார் தூக்கிவந்து அம்மணமாக மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளார். அந்த விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தமிழார்வன் தலையிட்டு கலைமணியை மருத்துவமனையில் சேர்த்து வழக்குப் பதிவு செய்யவைக்க போராடினார். ஏற்கனவே தமிழார்வன் மீது கோபத்தில் இருந்த ஆய்வாளர் ராஜ்குமாரை ஏவிவிட்டுவிட்டார்'' என்கிறார்.

கொலையான தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி, "கலைமணி விவகாரத்தில் ராஜ்குமார் மீது வழக்குப் பதிய ஆய்வாளருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் அப்பா. இது குறித்து ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்து அப்பா மீது வெறுப்பு உருவாக முருகேசனே காரணமாக அமைந்தார்'' என விரலை நீட்டுகிறார்.

நீடாமங்கலம் ஆய்வாளர் முருகேசனோ, "இருவரும் கட்சி பின்னணியுடையவர்கள். இருவரும் பஞ்சாயத்து செய்பவர்கள். இருவர் மீதும் குண்டாஸ் வழக்குப் பதிவதற்கான சிபாரிசுகள் வந்துள்ளன. எனக்கு யார் மீதும் பகை கிடையாது. அதிகாரிகள் உத்தரவுப்படி செயல்பட வேண்டியவன்'' என தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார்.

மாவட்ட எஸ்.பி. விஜயகுமாரிடம் இதுவரையிலான நடவடிக்கைகள் குறித்து கேட்டோம், “"ஆய்வாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் 5 பேரை கைது செய்திருக்கிறோம். மற்றவர்களையும் விரைவில் கைது செய்வோம்'' என்றார்.